முக்கிய செய்திகள்:
குருவாயூரில் உள்ள கல்லூரி இதழில் மோடியை பற்றி விமர்சனம்

குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் பயிலும் ஒன்பது மாணவர்கள் மோடியை பற்றி தங்கள் கல்லூரி இதழில் ஆட்சேபகரமான புதிர் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த புதிரில் மோடியை பற்றி அவதூறாகவும், ஆட்சேபகரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புதிரை பிரசுரித்தது தொடர்பாக மாணவ செய்தி ஆசிரியர், உதவி செய்தி ஆசிரியர் மற்றும் செய்தி ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேரும் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இந்திய தண்டனை சட்டம் 153க்குட்பட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கல்லூரியை நடத்தி வரும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா ஆலய நிர்வாக குழுவும், இது குறித்து விளக்கமளிக்குமாறு கல்லூரி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோடி பற்றி அம்மாநிலத்தில் அவதூறான செய்தி வெளியிடுவது இது இரண்டாவது தடவையாகும். ஏற்கனவே அங்குள்ள தொழிற்பயிற்சி கல்லூரியில் மோடியை அடால்ப் ஹிட்லர், ஒசாமா பின் லேடன், ஜார்ஜ் புஷ் மற்றும் வேறு சிலருடன் ஒப்பிட்டு எதிர்மறையான எண்ணங்கள் கொண்டவர் என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 392 இதழ்களும், ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்