முக்கிய செய்திகள்:
டெல்லியில் காங்கிரசார் போராட்டம்

டெல்லியில் கடும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அத்துடன் குடிநீர் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது. அவற்றின் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி டெல்லியில் இன்று காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இன்று காலை 9.30 மணியளவில் வடக்கு டெல்லியில் உள்ள நங்ளாஸ் ரெயில் நிலையத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தலைமையில் கூடினர்.அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு புறப்பட தயாராக இருந்த ரெயில்களை மறிக்க முயன்றனர். எனவே அங்கிருந்து கலையும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் அதை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்கவில்லை. அதை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தும் அவர்கள் தொடர்ந்து தண்டவாளத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.எனவே, அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து போலீசார் அகற்றினர். அதை தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் அரவிந்தர்சிங் லவ்லி, டெல்லி காங்கிரசின் தலைமை செய்தி தொடர்பாளர் முகேஷ் சர்மா, சீனியர் தலைவர் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் நங்ளாஸ் மற்றும் கோண்டா போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையே போலீசாரின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அமைதியான முறையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை தீரும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

 

மேலும் செய்திகள்