முக்கிய செய்திகள்:
3 எம்.பி.க்கள் உள்பட 6 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு

வெளிநாடு பயணங்களுக்கான சிறப்பு பயணச் சலுகைகளை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக 3 எம்.பி.க்களின் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

இது குறித்து சிபிஐ வட்டாரத் தரப்பில் கூறும்போது, "மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.பண்டோபாத்யாயா (திரிணமூல்), பிரேஜேஷ் பதாக் (பகுஜன் சமாஜ்), லாஹ்மிங் லியானா (மிசோ தேசிய முன்னணி கட்சி), முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜே.பி.என். சிங் (பாஜக), மஹூத் மதானி (ராஷ்டீரிய லோக் தளm கட்சி), ரேணு ப்ரதான் (பிஜூ ஜனதா தளம்) ஆகியோர் மீது சிறப்பு பயணச் சலுகைகளை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நாங்கள் இது குறித்த தகவல்களை பெற, தற்போதைய எம்.பி.க்களை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டபோது, அவர்கள் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகவே 10 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது" என்றனர்.அரசு பதவியில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயணச் சலுகைகளை பயன்படுத்தி, தவறான கணக்குகளைக் காண்பித்து, லட்சக்கணக்கில் ஊழல் செய்ததாக சென்ற ஆண்டு புகார் எழுந்தது.

ஜனத தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அனில் குமார் ஷஹானி, சில பயண நிறுவனங்களிடம், வெளிநாடுப் பயணம் மேற்கொண்டதாக ரூ.9.5 லட்சம் மதிப்பிலான போலி ரசீது பெற்று மோசடி செய்ததாக அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.இது போல இன்று சோதனை மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களும் பயணச் சலுகையை முறைகேடாக பயன்படுத்தி, பயண நிறுவனங்களுடன் இணைந்து ஊழல் செய்துள்ளனர் என்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மேற்கொள்ளும் முதற்கட்ட சோதனை இதுவாகும்.

கடந்த மார்ச் மாதம், ஏர் இந்தியா விமானப் பயணிகளிடம், லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, கொல்கத்தாவில் பயணி ஒருவரிடமிருந்து சுமார் 600 வெற்று போர்டிங் பாஸ்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்