முக்கிய செய்திகள்:
பியாஸ் ஆற்று அடித்து செல்லப்பட்ட மாணவர்கள் உடலை தேடும் பணி தீவிரம்

இமாச்சலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற ஐதராபாத் தனியார் என்ஜினீயரிங் மாணவ –மாணவிகள் 24 பேர் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்களில் 2 மாணவர்கள், 3 மாணவிகள் பிணங்கள் மீட்கப்பட்டது. 4 நாட்களுக்கு பிறகு நேற்று ஒரு மாணவன் உடல் மீட்கப்பட்டது.மேலும் 18 மாணவ– மாணவிகள், ஒரு சுற்றுலா வழிகாட்டி வெள்ளத்தில் சிக்கி மாயமாகி விட்டனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் ஆகி விட்டதால் அவர்கள் உயிருடன் இல்லை என்பது உறுதியாகி விட்டது. உடல்களையாவது மீட்டு கொடுங்கள் என உறவினர்கள் கெஞ்சி கதறுவதால் உடல்களை மீட்க ராணுவ உதவியை தெலுங்கானா அரசு கோரி உள்ளது. இதன்படி ராணுவ வீரர்கள் தேடும் பணியில் இறங்கி உள்ளனர்.

பியாஸ் ஆற்று நீர் கீழ் நோக்கி அங்குள்ள பந்தோ அணைக்கு செல்வதாலும் ஆற்றில் பாறைகள் நிறைந்து காணப்படுவதாலும் பிணங்கள் பாறைக்குள் சிக்கி இருக்க கூடும் என கருதப்படுகிறது.ஏனெனில் பிணமாக மீட்கப்பட்ட மாணவர்கள் முகத்திலும், உடலிலும் பலத்த காயங்கள் உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய அவர்கள் பாறையில் அடிபட்டு உயிர் இழந்து இருப்பதை இது உணர்த்தியது.

மாணவர்கள் உடலை தேடும் பணியில் ஆள் இல்லாத விமானம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தண்ணீருக்குள் கேமிராவை பொருத்தி தேடவும் திட்டமிட்டு உள்ளனர்.மாணவர்கள் உடலை கண்டுபிடித்து கொண்டு வர திறமை வாய்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜம் திரிவேதியை தெலுங்கானா அரசு அனுப்பியுள்ளது. இவர் ஆந்திர முன்னாள் முதல்–மந்திரி ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் ஒரு இடத்தில் சிக்கியபோது துணிச்சலாக மலைப்பகுதிக்கு சென்று ஹெலிகாப்டரை கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்