முக்கிய செய்திகள்:
சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியா திகழ வேண்டும் : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக மாநில முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோருடன் அருண் ஜெட்லி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

பல்வேறு மாநிலங்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்த அருண் ஜெட்லி, இறுதியில் பேசும் போது, டெல்லியில் உட்கார்ந்து செயல்படும் அரசாக இல்லாமல், மாநில அரசுகளையும் வளர்ச்சியில் சம பங்குதாரர்களாக அமைத்துக் கொள்வதே மத்திய அரசின் கொள்கை என்று தெரிவித்தார்.

மேலும், நிதிக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில், மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்றவை அரசுக்கு பெரும் சவாலாக உள்ளதாக குறிப்பிட்ட அருண் ஜெட்லி, இதனையும் தாண்டி சில மாநிலங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.

பொருளாதார இணைப்பின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்துவதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும், விரைவில் இந்த வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

நமது தொழில்துறையை நவீனப்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்ட அருண் ஜெட்லி, இனியும் சர்வதேச தொழில்களுக்கு சந்தையாக இந்தியா இருக்காமல், சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியா திகழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

மேலும் செய்திகள்