முக்கிய செய்திகள்:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில், பதவியேற்காத சில எம்.பி.க்கள் இன்று பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து, ஆந்திர மறுசீரமைப்பு அவசரச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, போலாவரம் நீர்ப்பாசன திட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

இதே பிரச்னையை முன்வைத்து ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட சூழலில், மக்களவையை நாளைவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதற்கிடையே, மாநிலங்களவையில் ஆளும் கட்சியின் தலைவராக அருண் ஜெட்லியும், எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத்தும் செயல்படுவார்கள் என ஹமித் அன்சாரி அறிவித்தார். இதையடுத்து மாநிலங்களவையும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாளை விவாதம் நடைபெற உள்ளது.

 

மேலும் செய்திகள்