முக்கிய செய்திகள்:
திருப்பதி மலையில் தீ

திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் சுமார் 37 இடங்களில் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால் அடர்ந்த காட்டுப்பகுதியில் வளர்ந்திருந்த உயர்ரக மரங்கள் மற்றும் சிவப்பு சந்தனமரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வானத்தில் பறந்தபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது. எனினும், சுமார் 460 ஹெக்டேரில் மரங்கள் எரிந்து நாசமாயின.

இந்தநிலையில் நேற்று மதியம் திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் 56–வது கொண்டை ஊசி வளைவு அருகில் வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருமலை –திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள், பாதுகாப்பு சிப்பந்திகள், வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயை முழுமையாக அணைத்தனர்.இந்த காட்டுத்தீ காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்தில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. என்றாலும் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் மற்றும் செடி–கொடிகள் தீயில் எரிந்து நாசமாயின.மர்மகும்பல் யாராவது தீ வைத்தனரா? தீ பிடித்தற்கான காரணம் குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வனபகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்