முக்கிய செய்திகள்:
பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ராகுல்

உத்தரப் பிரதேச மாநிலம் படான் பகுதியில் 14, 15 வயதையுடைய சிறுமிகள் இருவர் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிபட்டு கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தார், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, உத்தர பிரதேச அரசு வழங்கிய ரூ.5 லட்சம் நிவாரண தொகையை நிராகரித்தனர்.

இந்த நிலையில் சிறுமிகளை இழந்து வாடும் குடும்பத்தினரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ராகுலுடன் உ.பி மாநில காங்கிரஸ் தலைவர் மதுசுதன் மிஸ்திரி, நிர்மலா கத்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.2 சிறுமிகளின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல், சிறுமிகள் தொங்கவிடப்பட்டிருந்த பகுதியை ஆய்வு செய்து, ஊர் மக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து உதவிகளை செய்வதாக அவர் உறுதி அளித்தார்.

ராகுலிடம் பேசிய சிறுமியின் பெற்றோர், தங்களுக்கு நிவாரணம் தேவையில்லை என்றும், வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற உதவி வேண்டும் என்று கேட்டுக்கொணாடார்.மேலும், குற்றவாளிகள் அனைவரையும் மக்கள் முன்னே தூக்கிலிட வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஊர் மக்கள் முன்னே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தனர். அது போல அவர்களை மக்கள் முன் தண்டிக்க வேண்டும் என்றும் சிறுமிகளின் பெற்றோர் வலியுறுத்தியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், "சிறுமிகளின் பெற்றோரிடம் பேசினேன். அவர்கள் பண உதவியை எதிர்பார்க்கவில்லை. பணத்தால் தங்கள் பெண்களின் மானத்தை மீட்க முடியாது என்றனர். நடந்த கொடுமைக்கு நீதி வேண்டும் என கேட்கின்றனர். நானும் அதையே வலியுறுத்துகிறேன். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை. குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அந்த தண்டனை, இது மாதிரியான குற்றங்களை செய்துவிட்டு எளிதில் தப்ப முடியாது என்ற எண்ணத்தை மற்றவர்கள் மனதில் பதியவைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்