முக்கிய செய்திகள்:
மோடி பதவியேற்பு விழா பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்வார் என பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், மோடி பதவியேற்பு விழாவில் சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கையூம், வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகர் சிரீன் ஷர்மீன் சவுத்ரி, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோரும் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர்.

ரேடியோ பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம், இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்வார் என செய்தி வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க தயாராகி உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 26-ம் தேதி பதவியேற்பு நிகழ்வுகள் நடக்க உள்ளன. இந்த விழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்தியா- பாகிஸ்தான் இடையே வெளியுறவு கொள்கைகளில் வேறுபாடு நிலவுகிறது. இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துருப்புகள் அத்துமீறுவதும், இதற்கு இந்திய தரப்பில் பதிலடி தருவதுமாக இரு நாட்டு எல்லையிலும் மோதல் போக்கு நிலவுகிறது. இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்பதால், வரும் காலங்களில் இருத் தரப்பிலும் சுமூகமான நடவடிக்கைகள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர், இந்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பது இதுவே முதன்முறை. பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நவாஸ் ஷெரீப் பங்கேற்பது வராலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்