முக்கிய செய்திகள்:
ஆம் ஆத்மியிலிருந்து இரு தலைவர்கள் விலகல்

ஆம் ஆத்மி பெண் தலைவர் ஷாசியா இல்மி அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தும் ஆம் ஆத்மியிலிருந்து விலகியுள்ளார்.

கட்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்: "ஆம் ஆத்மி கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை. சுயாட்சி பற்றி பேசும் ஆம் ஆத்மி கட்சிக்குள் அதற்கு சற்றும் இடம் இல்லாமல் இருக்கிறது" என்றார்.

நீண்ட யோசனைக்குப் பின்னரே கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக கூறியுள்ள ஷாசியா இல்மி, வேறு எந்த கட்சியிலும் சேரும் திட்டம் இல்லை என்றார்.

இருப்பினும், மக்களவை தேர்தலில் விருப்பத்துக்கு மாறாக காசியாபாத் தொகுதியில் இருந்து போட்டியிட நெருக்கடி அளிக்கப்பட்டதாலேயா பதவி விலகியதாக எழுந்த தகவலை ஷாசியா இல்மி திட்டவட்டமாக மறுத்தார்.

மேலும் அவர், கட்சிக்குள் பாரபட்சம் இருக்கக் கூடாது என்பது ஆம் ஆத்மியின் கொள்கைகளுள் ஒன்று. ஆனால் அப்படிப்பட்ட ஒரு கூட்டம் தான் இப்போது கட்சியையே நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்கள் மேல் திணிக்கப்படுகிறது. சுயாட்சி கொள்கையை கட்சிக்குள்ளேயே கடைபிடிக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற ஒரு அறிவாளி, சுயாட்சி கொள்கையை மதிக்காமல் செயல்படும் போது, அதைப்பற்றி வெளிப்படையாக பேசியே ஆக வேண்டும் என்றார்.

கட்சியில் இருந்து விலகிய கோபிநாத், ஆம் ஆத்மி கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், அரவிந்த் கேஜ்ரிவாலின் சமீப கால நடவடிக்கைகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும் கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார்.

கர்நாடக மாநில ஆம் ஆத்மி பொறுப்பாளர் பிருத்வி ரெட்டிக்கு தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்