முக்கிய செய்திகள்:
கெஜ்ரிவால் கைது: தொண்டர்கள் போராட்டம்

கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து ஆம்ஆத்மி தொண்டர்கள் டெல்லியில் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கடந்த ஜனவரி மாதம் ஊழல்வாதிகள் பட்டியல் வெளியிட்டார். அதில் பா.ஜனதா தலைவர் நிதின்கட்காரி பெயர் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து கெஜ்ரிவால் மீது நிதின்கட்காரி டெல்லி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அப்போது கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜர் ஆனார். அவரிடம் நீதிபதி ஜாமீன் பத்திரம் எழுதிக் கொடுத்து ஜாமீனில் செல்லலாம் என்று கூறினார். அதை ஏற்க மறுத்ததால் அவரை கைது செய்து 23–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு முழுவதும் அவர் சிறையிலேயே கழித்தார். இன்று 2–வது நாளாக சிறையில் இருந்தார்.

இதற்கிடையே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் ஆம்ஆத்மி தொண்டர்களும், நிர்வாகிகளும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திகார் ஜெயில் முன்பும் போராட்டம் நடந்தது.

அவர்களை போலீசார் அணி அணியாக கைது செய்து அப்புறப்படுத்தினார்கள். திகார் ஜெயில் முன்பு போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவும் தொண்டர்களுடன் கைதானார்.

இன்று 2–வது நாளாக டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் உடனுக்குடன் அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்