முக்கிய செய்திகள்:
அரசியல் என்பது சேவை என்ற நோக்கத்தில் பார்க்கப்பட வேண்டியது : பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து, அவரது சகோதரி பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியதாவது:

"நமது நாட்டில் ஒரு தலைவர் (நரேந்திர மோடி) இருக்கிறார். அவர் பதவி, அதிகாரத்தின் மீது வேட்கை கொண்டவர். அதிகாரத்தின் மூலம் தன்னை பலப்படுத்திக்கொள்ள, மக்களிடம் எதையாவதுச் சொல்லி, அதிகாரம் வழங்குமாறு கேட்டுக்கொண்டே இருப்பார்.

அரசியல் என்பது சேவை என்ற நோக்கத்தில் பார்க்கப்பட வேண்டியது. ஆனால், நாட்டில் உள்ள சிலர் அப்படி நினைக்கவில்லை. அவரது தேர்தல் பிரச்சாரம் மிகவும் கீழ் நிலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

ராகுல் காந்தியோ, உங்களுக்கு அதிகாரம் அளித்து, உங்களைப் பலப்படுத்த நினைக்கிறார். ஆனால் அந்தத் தலைவரோ தனக்கு மட்டுமே அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

என்னுடைய தந்தை அரசியலில் தொலைநோக்குப் பார்வையோடு இருந்தார். அவரிடமிருந்து ராகுல் கற்று தேர்ந்துள்ளார். அமேதியை முன்னேற்றும் உத்தியை என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி 35 ஆண்டுக்கு முன்னதாகவே தெரிந்து வைத்திருந்தார். இதுதான் இங்கு தரிசு நிலங்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம்.

நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்ற இடங்களில், எங்கள் குடும்பத்தின் மீது பழி சுமத்தும் நோக்கத்தில் சில புத்தகங்கள் வெளியிடப்படுகிறது. எனக்கு வந்த செய்தியின்படி, நான் பிரச்சாரம் மேற்கொள்ளும் முன், இரவோடு இரவாக சில புத்தகங்கள் ஆங்காங்கே வீசப்படுகிறது. அவற்றில் எங்கள் மீது வெறுப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது தெரியவந்துள்ளது.

இது போன்ற செயல்களில் கோழைகள் தான் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு ஏதாவது கூற வேண்டும் என்றால், அதனை அவர்கள் நேரில் வந்து, என் முன் நின்று பேசட்டும். இது போல கீழ்த்தரமாக நடந்துகொள்ள வேண்டாம்" என்றார் பிரியங்கா காந்தி.

மேலும் செய்திகள்