முக்கிய செய்திகள்:
ரெயில் பெட்டிகளில் அடுத்தடுத்து தீ விபத்து : பயணிகள் அலறியடித்துகொண்டு ஓட்டம்

புனே செல்லும் டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 5.10 மணிக்கு சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்தது. மாலை 5.03 மணியளவில் திடீரென ரெயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த பெட்டி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த பெட்டியில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலே செல்லும் ஓவர்ஹெட் மின்கம்பியில் மின்விநியோகம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெயில் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதைத் தொடர்ந்து சேதமடைந்த ரெயில் பெட்டியை ரெயில்வே ஊழியர்கள் தனியாக பிரித்தனர்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மாலை 5.43 மணியளவில் 9–ம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த கோலாப்பூர் சயாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்–5 பெட்டியிலும், மாலை 6.10 மணிக்கு 15–ம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஹவுரா மெயில் ரெயிலின் ஒரு பெட்டியிலும் இருந்து கரும்புகை கிளம்பி தீப்பிடிக்க தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு 2 ரெயில் பெட்டியிலும் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் தீப்பிடித்த 2 பெட்டிகளும் தனியாக பிரிக்கப்பட்டன.

சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து ரெயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பயணிகள் பீதி அடைந்தனர். பயணிகள் அனைவரும் சுதாரித்துக் கொண்டு கீழே இறங்கியதால் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து 3 ரெயில்களும் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு சென்றன.

புனே செல்லும் டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 6.14 மணிக்கு புறப்பட்டு சென்றது. 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய கோலாப்பூர் சயாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்