முக்கிய செய்திகள்:
கறுப்பு பணம் தொடர்பான வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் விவரம் தாக்கல்

கறுப்பு பணம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெர்மனி வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை மத்திய அரசு அளித்தது.

சீலிடப்பட்ட இரண்டு கவர்களில் வைத்து இந்த கணக்கு விவரங்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. அதில், ஜெர்மனி அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட 26 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களில், 8 பேர் தவறு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மன் வங்கியில் கணக்கு வைத்துள்ள மற்ற 18 இந்தியர்கள் மீதான வருமான வரித்துறை விசாரணை முடிந்துவிட்டதாகவும், ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் மீதான சட்ட நடவடிக்கை தொடங்கிவிட்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவரங்களைப் பெற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஆவணங்களை ஆய்வு செய்து வியாழக்கிழமை மாலையில் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.

வங்கிக் கணக்கு தொடர்பாக ஜெர்மனி அளித்த விவரங்களை மத்திய அரசு தராததால் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்