முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் - பாஜக மீது கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் பேசியது:

"மோடி போட்டியிடும் தொகுதியில் சோனியாவும், சோனியா போட்டியிடும் தொகுதியில் மோடியும் பிரச்சாரம் மேற்கொள்ளாதது ஏன்?

ராபர்ட் வதேரா நில பேர விவகாரத்தில் நரேந்திர மோடி தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு அக்கறை இருந்தால், ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு, வதேராவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?

அதேபோல், பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் மற்றும் அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்பி வரும் காங்கிரஸ், அது குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் அழுத்தம் தராதது ஏன்?

பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கிறார்களே தவிர, எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இதில் இருந்தே அவர்கள் கைகோத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுக உடன்பாடு உள்ளது.

டெல்லியில் ஷீலா தீட்சித், முகேஷ் அம்பானிக்கு எதிராக என்னால் வழக்குத் தொடர முடிந்தது. அப்படியிருக்க, கடந்த 4 மாதங்களாக வதேராவுக்கு எதிராக ராஜஸ்தானின் பாஜக அரசால் வழக்குப் பதிவு செய்ய முடியாதது ஏன்?

வாரணாசியில் குண்டர்கள் மூலம் மக்களையும் ஆம் ஆத்மி தொண்டர்களையும் அச்சுறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன" என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

மேலும் செய்திகள்