முக்கிய செய்திகள்:
மோடியிடம் இருந்து நாட்டை கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும்: சோனியா

பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி: 'குஜராத் மாதிரி' வளர்ச்சித் திட்டம் என்பது நிஜத்தில் 'மோடி மாதிரி' வளர்ச்சித் திட்டம். இத்திட்டத்தால் அம்மாநில மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதே மாதிரியான வளர்ச்சித் திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தால், கடவுள் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார்.

கூட்டத்தில் மேலும் சோனியா காந்தி பேசியதாவது: அகாலி தள கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது வருத்தமளிக்கிறது. குஜராத்தில் சீக்கியர்கள் வாழ வழியில்லை. சீக்கியர்கள் நலனை பாதுகாக்காத குஜராத் முதல்வருக்கு அகாலி தளம் ஆதரவு அளிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேல் குஜராத்தில் உள்ள சீக்கியர்கள் பிழைப்புக்கு வழியின்றி அங்கிருந்த வெளியேறும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தான் 'மோடி மாதிரி' வளர்ச்சித் திட்டத்தின் பயன்.

இத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.11 சம்பாதிப்பவர்கள் ஏழைகள் அல்ல. குஜராத்தில் 5 வயதுக்கு உட்பட்ட பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 45,000 ஏக்கர் நிலங்கள் பெரும் முதலாளிகளுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதியான குடிநீர் வசதி கூட குஜராத்தின் பல கிராமங்களில் இல்லை.

எனவே 'குஜராத் மாதிரி' வளர்ச்சித் திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வராமல் இருக்க வேண்டும்.

பாஜகவின் கொள்கை ஒரு தனி நபர் கைகளில் அனைத்து அதிகாரத்தையும் திணிப்பதே ஆகும். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழைகளும், விவசாயிகளும் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு கூட இரைந்து நிற்க வேண்டியிருக்கும் இவ்வாறு சோனியா பேசினார்.

 

மேலும் செய்திகள்