முக்கிய செய்திகள்:
அரசு பஸ்சில் ஸ்மார்ட் கார்டுகள்

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் சார்பில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ரெயில், பஸ் ஆகிய இரண்டிலும் இந்த கார்டு எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அந்த அமைப்பு கண்காணித்து வந்தது. தற்போது மெட்ரோ ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களிலும், டெல்லி மெட்ரொ ரெயில் கார்ப்பரேஷன் இயக்கும் ஃபீடர் பஸ்களிலும் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த புதிய மெட்ரோ ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு டெல்லி துணைநிலை ஆளுநர் இன்று ஒப்புதலளித்தார். இதற்கான திட்ட அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கார்டுகள், மெட்ரோ ரெயில், கிளஸ்டர் திட்டத்தின் கீழ் தனியார் நடத்தும் ஆரஞ்சு நிற பஸ்கள், மற்றும் மெட்ரோவுக்கு சொந்தமான ஃபீடர் பஸ்களில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டத்தின்படி டெல்லி மாநகர பஸ்களிலும் பயணம் செய்யலாம்.

மெட்ரொ கார்டின் இந்த புதிய வசதியை ஏற்றுக்கொள்ளும் வகையில் மென்பொருட்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதேபோல் பயணிகள் தாங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்கார்டில் உள்ள பார்கோடை பயன்படுத்தி கடைகளிலும் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதன்மூலம், புதிய வசதியை எதிர்பார்த்து காத்திருந்த டெல்லி பயணிகளுக்கு இப்போது ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்