முக்கிய செய்திகள்:
புல்லரின் துக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருணை மனுவை நிராகரிக்க காரணமற்ற காலதாமதம், புல்லரின் தற்போதைய உடல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரது தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்துள்ளதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 2003-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு புல்லர் கருணை மனுவை அனுப்பினார். அதை 8 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ம் ஆண்டு மே 14-ம் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து புல்லரின் சார்பில் அவரின் மனைவி நவ்நீத் கவுர், உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.

புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று புல்லரின் மனைவி நவ்நீத் கவுர் கோரியிருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பகிரங்கமாக விசாரணை நடத்து வதற்கு ஒப்புக்கொண்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, எஸ்.ஜே.முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வெளியாகும்வரை மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடைசியாக கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி ஆஜரானார்.

“தேவேந்தர்பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. இதுதொடர்பாக ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம்” என்று வாஹன்வதி தெரிவித்தார். வழக்கில் வரும் 31-ம் தேதி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி இன்று, தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் செய்திகள்