முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டதால் ராகுல் பிரச்சாரம் ரத்து

மோடியை விமர்சித்த காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் கைது செய்யப்பட்டதை அடுத்து இன்று உ.பி. சஹரான்பூர் தொகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத். இவர் சகாரன்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், ” பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, உத்தரபிரதேசத்தை குஜராத் போல கலவர பூமியாக மாற்ற முயல்கிறார், அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருந்தால் மோடியை துண்டு துண்டாக வெட்டுவோம். அவர் உத்திர பிரதேசத்தை குஜராத் என்று எண்ணுகிறார். குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர், ஆனால் உ.பி. யில் 42 சதவீத முஸ்லிமக்ள்.” என்று மோடி குறித்து கடுமையாக விமர்சித்தார்.

இம்ரான் மசூதின் இந்த பேச்சு இணையத்தில் பரவியதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் தேர்தல் விதிமுறையை மீறியது மற்றும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி இன்று சஹரான்பூரில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

இம்ரான் மசூதின் பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் இந்த விவகாரம் தொடர்பாக எந்த வெளிபாட்டினையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, தனது பேச்சுக்கு இம்ரான் மசூத் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘பிரசார சூட்டில் அப்படி பேசிவிட்டேன். நான் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தி இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்