முக்கிய செய்திகள்:
ஜஸ்வந்த் சிங்குக்கு சமாஜ்வாதி கட்சி அழைப்பு

ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஜஸ்வந்த்சிங்கை தங்கள் கட்சியில் சேரும்படி சமாஜ்வாதி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானின் பார்மரை சேர்ந்தவர். இப்போது மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் தொகுதி எம்.பி.யாக அவர் உள்ளார். மக்களவைத் தேர்தலில் பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த் சிங்குக்கு வாய்ப்பளிக்க பாஜக மறுத்து விட்டது. எனவே, அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணையுமாறு ஜஸ்வந்த் சிங்குக்கு உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஆசம்கான் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜஸ்வந்த்சிங் விரும்பினால் சமாஜ்வாதி கட்சியில் சேரலாம். அவருக்காக எங்கள் கட்சியின் கதவுகள் திறந்து உள்ளன’ என்றார்.

பாகிஸ்தான் எல்லை அருகே இருக்கும் பார்மரில் சுமார் 16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நம் நாட்டின் பெரிய தொகுதிகளில் ஒன்றான இங்கு ஏப்ரல் 17-ல் தேர்தல் நடைபெறவுள்ளது.

இங்கு பாஜக சார்பில் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் ஆதரவு பெற்ற சோனேராம் சவுத்ரி போட்டியிடுகிறார். இவர், பார்மர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3 முறை வென்றவர்.

மேலும் செய்திகள்