முக்கிய செய்திகள்:
மூன்றாவது அணியை தேசம் விரும்புகிறது: அகிலேஷ் யாதவ்

தேசம் மூன்றாவது அணியை விரும்புகிறது என உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டி:

சமாஜ்வாதி கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் சிறப்பிடம் பெறும். நாங்கள் 39க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றுவோம். தேசம் விரும்புவதைப் போல, தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி அமையும். காங்கிரஸ் மற்றும் பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் ஒரேமாதிரியானவை. ஆகவே, மூன்றாவது அணி மட்டுமே ஒரே வாய்ப்பு.

என் அரசின் முடிவுகள், என்னால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. மூத்தவர்களுடன் ஆலோசித்து முடிவுகளை எடுக்கிறேன். என் குடும்பத்தினர் அரசின் முடிவுகளில் தலையிடுவதில்லை. எதிர்க் கட்சிகள் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பர்.

வாரணாசியில் எங்கள் வேட்பாளரை மக்கள் ஆதரிப்பர். அங்கு நான் பிரச்சாரம் மேற்கொள்வேன். முஸாபர்நகரில் நடந்த வன்முறை துரதிருஷ்டவசமானது. நிலைமையைக் கட்டுப்படுத்த என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அவை செய்யப்பட்டிருக்கின்றன. வன்முறை நடந்த சமயம், முழு இரவும் விழித்திருந்து காவல் துறை தலைவருக்கு உரிய உத் தரவுகளைப் பிறப்பித்தேன். ராணுவத்தை வரவழைக்கும் முடிவை உடனடியாக எடுத்தோம்.

அரசியல் கட்சிகள் அச்சம்பவத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதிலும், முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 51 ஆயிரம் பேருக்கு உரியன கிடைப்பதிலும் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றார். வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் கைலாஷ் சௌராசியா களமிறக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்