முக்கிய செய்திகள்:
டெல்லி மாணவி பலாத்காரம்: 4 பேருக்கு தூக்குத் தண்டனை உறுதி

டெல்லியில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு தனது நண்பருடன் பேருந்தில் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி, டிசம்பர் 29-ந் தேதி இறந்தார்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், 6 பேரை கைது செய்தனர். இவர்களில் ஒரு குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். சிறுவன் என்பதால் மற்றொரு குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதர குற்றவாளிகளான முகேஷ், அக்சய் குமார், வினய் சர்மா, மற்றும் பவன் ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் 13-ம் தேதி விரைவு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மாற்ற வேண்டும் எனக் கோரி 4 பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்களை தவறாக சிக்க வைத்துவிட்டதாக அவர்களின் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அவர்களின் வாதத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

மேலும் செய்திகள்