முக்கிய செய்திகள்:
ஆந்திராவில் அரசியல் தலைவர்களை கடத்தி கொல்ல நக்சலைட்டுகள் சதி

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் 15 பேர் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். இதே போல் ஆந்திராவிலும் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஆந்திராவில் ஏப்ரல் 30, மே 7–ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. விசாகப்பட்டினம் மன்னியம் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் அதிக அளவில் உள்ளனர்.

தேர்தலின் போது இங்கு பிரசாரத்திற்கு வரும் அரசியல் தலைவர்களை கடத்தி, கொலை செய்ய நக்சலைட்டுகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு இருப்பதாக பாடலேறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பக்கிரியப்பா தெரிவித்தார்.

அரசியல் தலைவர்களை கடத்த 9 அதிரடிப்படை குழுக்களை நக்சலைட்டுகள் அமைத்து உள்ளனர். தலைவர்களை கடத்த அவர்கள் ஏற்கனவே ஒத்திகை நடத்தி உள்ளனர். இவர்களது கொலை பட்டியலில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பால்ராஜ் முதல் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவரது தம்பிகள் கிருஷ்ணாராவ், விநாயகராவ், முன்னாள் எம்.எல்.சி. சர்வேஸ்ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ராம்பாபு உள்பட 20 பேர் பெயர்கள் நக்சலைட்டுகளின் கொலை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.எனவே, இவர்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தேர்தலின் போது பெரும் கலவரத்தை ஏற்படுத்த நக்சலைட்டுகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும், அதனை முறியடிக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கருதப்படும் இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. நக்சலைட்டுகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்