முக்கிய செய்திகள்:
சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 11 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உள்பட 16 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 11 பேர், ஒரு தொழிலாளி உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.சுக்மா மாவட்டத்தின் ஜெரூம் நுல்லா வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.எஃப். மற்றும் மாநில போலீஸார் 44 பேர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த வாகனங்கள், டோங்காபால் - ஜெரூம் காட் பகுதியில் வந்தபோது நக்சல்கள் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர்.

அதேவேளையில், மலைப் பகுதிகளில் மறைந்திருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சி.ஆர்.பி.எப். வீரர்களும் பதில் தாக்குதலை நடத்தினர். எனினும், அதிக எண்ணிக்கையிலான நக்ஸசல்கள் பதுங்கித் தாக்கியதால் படையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

30 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படைக்கு தலைமை தாங்கிய இன்ஸ்பெக்டர் சுபாஷ் உள்பட 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள், 4 மாநில போலீஸார் மற்றும் அந்தப் பகுதி வழியாக வந்த தொழிலாளி ஒருவர் என 16 பேர் உயிரிழந்ததாக சத்தீஸ்கர் டிஐஜி திஸ்பன்ஷூ காப்ரா தெரிவித்தார்.

மலைவாழ் கிராமப் பகுதிகளில் சாலை அமைத்தால், பாதுகாப்புப் படையினர் போக்குவரத்து எளிதாகிவிடும் என்பதால் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் நக்சல்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தாக்குதல் நடத்திய நக்ஸல்களை தேடும் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. எனினும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.நக்சல்களின் இந்தத் தாக்குதல் குறித்து தகவல் அறிந்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங், காவல் துறை உயரதிகாரிகளின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே டெல்லியில் நிருபர்களிடம் பேசியபோது, தாக்குதல் குறித்த முழு விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.கடந்த 2010-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி சி.ஆர்.பி.எப். வீரர்கள் 75 பேர் பலியாகினர் என்பது கவனிக்கத்தக்கது.

பஸ்தார் பழங்குடியின பகுதியில் கடந்த 15 நாட்களில் நடைபெறும் 2-வது தாக்குதல் இது என்பது குறிப்படத்தக்கது. கடந்த மாதம் 28-ம் தேதி மாவோயிஸ்டு தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

மேலும் செய்திகள்