முக்கிய செய்திகள்:
அஜித்சிங் கட்சியில் இணைந்தனர் அமர்சிங், நடிகை ஜெயப்பிரதா

சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர்சிங் மற்றும் ஜெயப்பிரதா ஆகியோர் கட்சித் தலைவர் அஜித்சிங் முன்னிலையில் ராஷ்டிரிய லோக்தளக் கட்சியில் திங்கள்கிழமை இணைந் தனர். இதன்மூலம், அவர்கள் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவில் இணைவதாக கிளம்பிய சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த இணைப்பிற்கு பின் அமர்சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அஜித்சிங்கின் தந்தையான சவுத்திரி சரண்சிங், நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக செய்த பணியை யாராலும் மறுக்க முடியாது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே உ.பி.யை பிரிப்பதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இதை பிரித்தால்தான் உ.பி. மாநிலம் வளர்ச்சி அடையும்’ எனத் தெரி வித்தார்.

அஜித்சிங்கின் ஜாட் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் உ.பி.யின் மேற்குப் பகுதியை தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்பது ராஷ்டிரிய லோக்தளத்தின் நீண்டகால கோரிக்கையாகும்.அடுத்து பேசிய ஜெயப்பிரதா, அமர்சிங் எங்கு சென்றாலும் அவருடன் தாம் செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மத்திய விமான போக்குவரத்து அமைச்சராகவும் இருக்கும் அஜித் சிங்கிற்கு, உ.பி.யில் போட்டியிட காங்கிரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பத்தேபூர் சிக்ரியில் அமர்சிங் போட்டியிடலாம் எனவும், ஜெயப் பிரதா ராஜஸ்தானில் ஜாட் சமூகம் அதிகம் வசிக்கும் தொகுதி ஒன்றில் நிறுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2004 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஏழு இடங்கள் பெற்ற அமர்சிங் ஐந்தில் வெற்றி பெற்றார்.

கடந்த இருலோக்சபை தேர்தல் கள் வரை தேசிய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட வராக இருந்தவர் அமர்சிங். முலாயம்சிங்கின் இணைபிரியா நண்பராகவும் இருந்தவர். உ.பி. அமைச்சர் ஆசம்கானால் பொதுச்செயலாளர் பதவியுடன் கட்சியில் இருந்தும் 2010-ல் நீக்கப்பட்டார். இதனால், அவரது நெருங்கிய சகாவும், உ.பி.யின் ராம்பூரின் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவும் சமாஜ்வாடியை விட்டு விலகினார்.

ராஷ்டிரிய லோக்மஞ்ச் எனும் பெயரில் கட்சி துவங்கி 2012 சட்டசபை தேர்தலில், உ.பி.யின் 403-ல் 360 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியவர்களுக்கு படுதோல்வி கிடைத்தது. இதனால், அரசியல் எதிர்காலம் கருதி இருவரும் கட்சியை கலைத்து விட்டு, வேறு பெரிய கட்சிகளில் சேர முடிவு எடுத்தனர். இதனால் அவர்கள், பாஜக அல்லது காங்கிரசில் சேர முயன்றதாக செய்திகள் கிளம்பின.

 

மேலும் செய்திகள்