முக்கிய செய்திகள்:
உயிருடன் இருப்பவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேஜ்ரிவால்

உயிருடன் உள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் 3 பேர் இறந்துவிட்டதாகக் கூறி, அவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் அஞ்சலி செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசும் போது, சமூகத்துக்காகப் போராடி உயிரிழந்த 4 சமூக ஆர்வலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அவர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளில், குஜராத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடி, சமூகத்துக்காக உயிர்துறந்த நான்கு பேருக்கு என் இதயத்தின் அடிப்பகுதியிலிருந்து அஞ்சலி செலுத்துகிறேன்” என்றார். அமித் ஜேத்வா, பாகு தேவானி, ஜெய்சுக் பாம்பானியா, மணிஷா கோஸ்வாமி ஆகிய நான்கு பேர் இறந்து விட்டதாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆனால், இதில் அமித் ஜேத்வா மட்டும் கடந்த 2010ல் குஜராத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கொல்லப்பட்டார். அவரை சுரங்க மாபியாக்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மற்ற மூவரும் நல்ல உடல்நிலையுடன் வாழ்ந்து வருகின்றனர். தேவானி(64) வழக்கறிஞராக உள்ளார். அவர் கூறுகையில், “மூன்றாண்டுகளுக்கு முன் தாக்கப்பட்டேன். தற்போது பூரண உடல்நலத்துடன் உள்ளேன். ஊழலுக்கு எதிராகவும் போராடி வருகிறேன். விரைவிலேயே ஆம் ஆத்மியில் இணைவேன்” என்றார்.

தேவானி, ஜெய்சுக் பாம்பானியா, மணிஷா கோஸ்வாமி ஆகிய மூவருமே தாக்குதலுக்கு இலக்காகி உயிர் தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து ஆம் ஆத்மியின் குஜராத் மாநில அமைப்பாளர் சுக்தேவ் படேல் கூறுகையில், “கேஜ்ரிவால் இந்தப் பெயர்களைக் கூறும்போது நான் அங்கு இல்லை. ஆனால் நிச்சயமாக இத்தகவலைச் சரிபார்ப்பேன்” என்றார்.

 

மேலும் செய்திகள்