முக்கிய செய்திகள்:
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவு:தமிழக அரசு பதில் மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு சரியானதுதான் என்று உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் அனுப்பி யிருந்த கருணை மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் குடியரசுத் தலைவர் கால தாமதம் செய்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து முருகன் உள்ளிட்ட மூவரையும், இவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 4 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசு சார்பில் பிப்ரவரி 19-ம் தேதி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு தனது பதில் மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.

தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மூவரையும் மன்னித்து விடுதலை செய்வது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்குத்தான் உள்ளது.மூவரையும் விடுவிப்பது தொடர் பான யோசனையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவித்தது. அது தொடர்பாக ஆலோசனை நடத்தவும் தமிழக அரசு முயற்சித்தது. தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தமிழக அரசிடம் நேரடியாக தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால், மாநில அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு சென்றுவிட்டது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 32-ன் படி மத்திய அரசால் நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்ய முடியாது. அடிப்படை உரிமைகள் என்பது குடிமக்களுக்குத்தானே தவிர, அரசுக்கு அல்ல. சட்ட நடைமுறைகளை மீறி இந்த மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. எந்தவொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படாத நிலையில், குடிமகனின் சார்பில் அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனு என்ற அடிப்படையிலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432, 433 ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் குற்றவாளிகளை விடுவிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்து, அது தொடர்பாக உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கற்பனையான காரணத்தைக் கூறி மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 162, 73(1)(a) ஆகிய பிரிவுகளின்படி செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடம்தான் உள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த மூவரும் தண்டனை பெற்றுள்ளதால், அவர் களை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கையை செயல்படுத்தும் உரிமை மாநில அரசிடம்தான் உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, சட்டப் பிரிவு 432-ன் படி அவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது.

குற்றவாளிகள் அனைவரும் ஏற்கெனவே தடா சட்டப் பிரிவு தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதத் தடைச் சட்டம், மத்திய அரசின் சட்டங்களின் கீழ் பெற்ற தண்டனை களை ஏற்கெனவே சிறையில் கழித்துவிட்டனர்.

எனவே, அவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு சரியானதுதான். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணை வரும் மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

முன்னதாக மூவரையும் விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததது.

 

மேலும் செய்திகள்