முக்கிய செய்திகள்:
ராஜபக்சேவுடன் மன்மோகன் சிங் சந்திப்பு

மியான்மரில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர் பிரச்சினை, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

கடந்த 2012- ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் - இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுவது இது முதல் முறையாகும்.தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் திங்கள் கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்டிருக்கும் சூழலில் பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்சேவை சந்தித்துள்ளார்.

அவருடைய இந்த சந்திப்பு, உள்நாட்டில் ராஜபக்சேவுடனான சந்திப்புக்கு எதிர்ப்பு இருந்தாலும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தியா எப்போதுமே கருதுகிறது என்பதை பறைசாற்றும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது.இன்றைய சந்திப்பின் போது, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதுதவிர, ஜெனீவா மனித உரிமை மாநாட்டு கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் குறித்தும் பிரதமர், ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாக தெரிகிறது.ஐ.நா. தீர்மானம் பொருத்தவரையில், வலுவான வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் அதே வேளையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் டெல்லி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் செய்திகள்