முக்கிய செய்திகள்:
பழைய நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி அவகாசம்

2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்களுக்கு மேலும் 9 மாதம் அவகாசம் அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலம் வரும் 2015 ஜனவரி 1-ம் தேதி வரை, 2005-க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:

பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் எவ்வித அசவுகரியமு மின்றி மாற்றிக் கொள்வதற்கான வசதி களை வங்கிகள் ஏற்படுத்த வேண்டும். மாற்றும்போது அந்த ரூபாயின் முழுமதிப்பையும் மாற்றிக் கொடுக்க வேண்டும். பொதுமக்கள் எவ்வித சிரமத்திற்கும் உள்ளாகக்கூடாது. அதனை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணிக்கும்.

2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் தயக்கமின்றிப் பயன்படுத்தலாம். பழைய ரூபாய் நோட்டுகளும் செல்லத்தக்கவையே. பெரும்பாலான பழைய நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டுவிட்டன.

மிகக் குறைந்த அளவு நோட்டுகளே பொதுமக்களிடம் உள்ளன. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தின் கீழ்ப் பகுதியில். அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப் பட்டிருக்காது. அத்தகைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகவும், அவற்றை ஏப்ரல் 1-ம் தேதி முதல் புழக்கத்துக்கு விடப்போவதில்லை எனவும் ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 22-ம் தேதி அறிவித்திருந்தது.

இந்த நடவடிக்கை பண மதிப்பைக் குறைக்கும் பொருட்டோ, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டோ எடுக்கப்பட்டதல்ல என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்