முக்கிய செய்திகள்:
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை எதிர்த்து மனு

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதை எதிர்த்து அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதே விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மார்ச் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அண்மையில் ஆயுளாகக் குறைத்தது.

இதைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெய குமார், ரவிசந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராஜீவ் காந்தியுடன் பலியானவர்கள் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாஸ், ஜான் ஜோசப் மற்றும் அமெரிக்கை வி. நாராயணன், ஆர்.மாலா, எம்.சாமுவேல் திரவியம், கே.ராமசுகந்தன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

குற்றவாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் நலனை அரசு புறக்கணித் துள்ளது. இந்த முடிவு எதிர்கால சமுதாயத்துக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும்.

அரசியல் ஆதாயத்துக்காகவே தமிழக அரசு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது. இது சட்டவி ரோதமானது. கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது.

அதன்படி ராஜீவ் கொலைக் குற்றவாளி களின் தண்டனையை ரத்து செய்யக்கூடாது. அவர்களை சிறையில் இருந்து விடுவிக்கக் கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு மனுவோடு சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்