முக்கிய செய்திகள்:
ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று வீரர் தற்கொலை

காஷ்மீர் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பல்வேறு முகாம்களில் உள்ள அவர்கள் போதிய ஓய்வு இல்லாத காரணத்தால் கடும் மன அழுத்தத்துக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உரிய விடுமுறையும் கிடைப்பதில்லை. இது அவர்களை திடீர், திடீரென வெறிச்செயலில் ஈடுபட வைத்து விடுகிறது.

அத்தகைய பயங்கர நிகழ்வு ஒன்று இன்று (வியாழக்கிழமை) காலை காஷ்மீர் மாநிலம் கன்தெர்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமில் நடந்தது. அந்த முகாமில் இருந்த ஒரு ராணுவ வீரர் திடீரென தன் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சக ராணுவ வீரர்களை நோக்கி சுட்டார்.மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்ட அவர் கூச்சலிட்டப்படியே துப்பாக்கியால் சுட்டார்.

சக ராணுவ வீரர்கள் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. நாலா புறமும் சிதறி ஓடினார்கள். என்றாலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.அதன் பிறகு துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர், அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்தார். கண்மூடி திறப்பதற்குள் இந்த கொடூர சம்பவம் நடந்து முடிந்து விட்டது.

இந்த சம்பவத்தால் மனஸ்யிலில் உள்ள 13–வது ராஷ்டீரிய ரைபிள் முகாமில் பதற்றம் ஏற்பட்டது. உயர் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.இதையடுத்து துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவ கோர்ட்டில் இதற்கான விசாரணை நடைபெறும்.

 

மேலும் செய்திகள்