முக்கிய செய்திகள்:
பா.ஜனதா கட்சிக்கு 236 இடம்:கருத்துகணிப்பில் தகவல்

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே பல்வேறு நிறுவனங்கள் கருத்துகணிப்புகள் நடத்தி வருகின்றன.இந்த கருத்து கணிப்புகளில் எல்லாம் பாரதீய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் காங்கிரஸ் 2–வது இடத்துக்கு தள்ளப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் ஆட்சி அமைக்கக்கூடிய தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காது என்றும் தகவல் வெளியானது.

தற்போது புதிய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.தனியார் தொலைக்காட்சியான ஏ.பி.பி. நியூஸ் மற்றும் ஏ.சி.நீல்சன் நிறுவனம் இந்த புதிய கருத்து கணிப்பை நடத்தியது.

அதில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு 236 தொகுதிகள் வரை கிடைக்கும்; அதில் பாரதீய ஜனதா மட்டும் 217 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.இதற்கு முன் இல்லாத வகையில் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று இந்த புதிய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி மிக மோசமான வகையில் 2 டிஜிட் அளவுக்குதான் வெற்றி பெறும். அந்த அணிக்கு 92 தொகுதிகள் வரைதான் கிடைக்கும். இதில் காங்கிரஸ் மட்டும் தனித்து 73 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.மற்ற கருத்து கணிப்புகளைவிட அதில் காங்கிரசுக்கு மிக மோசமான தோல்வியை சந்திக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இடதுசாரி கட்சிகளுக்கு 2009 தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதாவது 29 தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி பெறும். மற்ற பிற கட்சிகள், மாநில கட்சிகள் சேர்ந்து 186 இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 19 தொகுதிகளிலும், பிஜூ ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தி.மு.க. பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு தலா 13 தொகுதிகள் கிடைக்கும் என்றும் புதிய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.இந்த தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். அது தேசிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்