முக்கிய செய்திகள்:
பாராளுமன்ற நிலைக்குழு கவலை

கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா போன்ற பெரிய ஆறுகள் நமது நாட்டின் நீர் ஆதாரத்துக்கான தேவையை நிறைவு செய்வதில் முதலிடம் வகிக்கின்றன.இவற்றில், யமுனை இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தின் இமய மலை பகுதியியில் அமைந்துள்ள யமுனோத்ரியில் தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா வழியாக பாய்ந்து, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ தூரம் வளைந்து, நெளிந்து ஓடி வட மாநிலங்களின் பெரும்பகுதி விளைச்சல் நிலங்களுக்கு தேவையான நீராதாரத் தேவையை யமுனை ஆறு நிறைவேற்றி வருகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித நதிகளில் ஒன்றாகவும் கருதப்படும் யமுனையில் நீராட செல்லும் பக்தர்கள் அசுத்தங்களை வீசுவதாலும், பல பகுதிகளில் இருந்து பாய்ந்து வரும் கழிவுநீர் கால்வாய்கள் யமுனையில் கலப்பதாலும் எதிர்கால பயன்பாட்டுக்கு உதவாத வகையில் யமுனையின் நீர் மாசடைந்து கிடக்கிறது.இந்த மாசுகளை அகற்றவும், மேலும் மாசடையாதபடி யமுனை ஆற்றை பாதுகாக்கவும் மத்திய ஊரக மேம்பாட்டு துறையின் சார்பில் டெல்லி துணை நிலை கவர்னரின் தலைமையில் 31 எம்.பி.க்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் சார்பில் யமுனையை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிட்டும், தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டிய யமுனை ஆற்று நீரின் கருப்பு நிறம் இன்னும் மாறவில்லையே... என மத்திய ஊரக மேம்பாட்டு துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு வேதனை தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகள்