முக்கிய செய்திகள்:
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்து: சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:,

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூன்று பேரும் தங்கள் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகள் தாமதம் ஆனதால் தங்கள் தூக்குத் தண்டனையை குறைக்க கோரி இருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது.

அவர்கள் 3 பேரும் தங்கள் வாழ்நாளின் இறுதி நாள் வரை ஜெயிலிலேயே இருக்க வேண்டும். என்றாலும் அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம்.தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் சிறையில் எந்த சித்ரவதையும் செய்யப்படவில்லை. அவர்கள் எந்த துயரமும் அனுபவிக்கவில்லை என்று அட்டர்னி ஜெனரல் வாகனவதி கூறியதை எங்களால் ஏற்க இயலாது. மத்திய அரசின் இந்த வாதத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.

ஏனெனில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தூக்குத்தண்டனை பெற்று 23 ஆண்டுகளாக சிறைக்குள் இருப்பவரின் வலி மனநிலை என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது விரைவான முடிவு எடுப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும். இன்றைய தீர்ப்புக்கு பிறகாவது இனி எதிர்காலத்தில் கருணை மனுக்கள் மீது விரைந்து முடிவு எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஜனாதிபதி மற்றும் மத்திய அரசு அவர்கள் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்துவிட்டனர். அதனால்தான் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது.எனவே இனி கருணை மனுக்களை கையாளும் விஷயத்தில் மத்திய அரசு ஒரு ஒழுங்கு முறையை கடைபிடிக்கும் என்று கருதுகிறோம்.இவ்வாறு சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகள்