முக்கிய செய்திகள்:
மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது ஆந்திர எம்.பி.க்கள் தெலுங்கானாவை எதிர்த்து கோஷம் எழுப்பினார்கள். சபாநாயகர் இருக்கை அருகே வந்து நின்றவாறு கோஷம் எழுப்பினார்கள். அவர்களை சபாநாயகர் மீராகுமார் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் தன்னை அலுவலகத்தில் வந்து சந்தித்து தெரிவிக்குமாறு கூறினார். இதையடுத்து எம்.பி.க்கள் இருக்கைக்கு திரும்பி அங்கிருந்தவாறு கோஷம் எழுப்பினார்கள்.

எம்.பி.க்களின் கோஷததுக்கு இடையே ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எம்.பி.க்களும் இடைவிடாது கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

* சென்ற ஆண்டின் நிதி பற்றாக்குறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நடப்பு நிதி பற்றாக்குறை 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. * பணவீக்கம் விகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து ஜனவரி மாதத்தில் 5.05 ஆக குறைந்துள்ளது. * நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.2 ஆகவும், ஏற்றுமதி விகிதம் 6.3 ஆகவும் அதிகரித்துள்ளது. 32,600 கோடி டாலராக ஏற்றுமதி அதிகரித்துள்ளது. * அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.1,500 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. * நாட்டின் உணவு உற்பத்தி 263 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். * உணவு, உரம், எரிபாருள் மானியத்துக்காக ரூ.2,46,397 கோடி ஒதுக்கப்படுகிறது.

* ரெயில்வேக்கான நிதி ஒதுக்கீடு ரூ.26 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.29 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படுகிறது. * அரிசி சேமித்து வைக்கப்படும் கிடங்குகளுக்கான சேவை வரி ரத்து செய்யப்படுகிறது. சேவை வரி விகிதம் வேளாண் பொருட்கள் பட்டியலில் இருந்து அரிசிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. * மின்சாரம் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 2,34,600 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. * நாட்டில் ரூ.66,000 கோடி அளவிலான 296 திட்டங்களுக்கு மத்திய மந்திரிசபை கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது. * 10 ஆண்டுகளுக்கு முன் கல்விக்காக ரூ.10,145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது நடப்பு ஆண்டில் கல்விக்காக ரூ.79,251 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு மானியத்துக்கு ரூ.1,15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * ராணுவத்துக்கான நிதி 10 சதவீதம் அதிகரித்து ரூ.2.24 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நடப்பு நிதி ஆண்டில் பயிர்க்கடன் ரூ.2,80,000 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. * மாநில அரசுகளுக்கு திட்ட ஒதுக்கீடு ரூ.3,38,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை தாராளமயமாக்கப்பட்டுள்ளது. * அஞ்சல்துறையை நவீனப்படுத்த பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது, * புதிய அணுமின் நிலையங்கள் மூலம் மின்உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. * மக்களின் ஆரோக்கியத்தை காக்க நவீன மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. * செயற்கைகோளை அனுப்புவதில் சுயசார்பு நிலையை அடைந்துள்ளது. * நேரடி மானியத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. * ரூ.628 கோடி நேரடி மானியத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. * ஆதார் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு உறுதி எடுத்துள்ளது. * பெண் குழந்தைகள், மகளிர் பாதுகாப்புக்கு 2014–15-ம் நிதியாண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு. * 7 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

* திட்ட செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படமாட்டாது. * நாட்டில் 4 மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் தொடங்கப்படும். * பெண்களின் பொருளா தார வளர்ச்சிக்காக மகிளா வங்கி திறக்கப்பட்டுள்ளது. * வரும் நிதியாண்டில் ரூ.8 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. * சென்னை– பெங்களூர், பெங்களூர்– மும்பை, அமிர்தசரஸ்– கொல்கத்தா இடையே தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும். * ரூ.500 கோடியில் ஒரே தகுதி ஒரே சம்பளம் திட்டத்தில் ஆயுதப்படை அமல்படுத்தப்படும். * கிராமப்புற வீட்டு வசதிக்கு ரூ.6,000 கோடியும், நகர்ப்புற வீட்டு வசதிக்கு ரூ.2,000 கோடியும் ஒதுக்கப்படுகிறது.

* சிறுபான்மையினர் வங்கி கணக்குகள் 10 ஆண்டுக்கு முன் 14,15,000 ஆக இருந்தது. தற்போது அது 43,53,000 ஆக அதிகரித்துள்ளது. * வருமானவரி விதிப்பு மற்றும் உச்ச வரம்பில் மாற்றம் இல்லை. * சிறிய ரக கார்கள், பைக் உற்பத்தி வரி 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு. * நடுத்தர ரக கார்களுக்கான உற்பத்தி வரி 24 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைப்பு. * உற்பத்தி வரி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் கார், இருசக்கர வாகனங் களுக்கான விலை குறைய வாய்ப்பு உள்ளது.

* கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பிரிவு விரைவில் செயல்படத் தொடங்கும். புதிதாக 7 அணுமின் நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. * 2009–ம் ஆண்டு மார்ச் 31–ந்தேதிக்கு முன் மாணவர்களின் கல்விக் கடனுககான வட்டியை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 9 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள். * வடகிழக்கு மாநிலங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு ரூ.1,200 கோடி.

* மாணவி நிர்பயா நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டுக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். * ஆதார் அட்டை திட்டத்தின் அடிப்படையில் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரடி மானியம் வழங்க ரூ.2.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. * உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் வரி விதிப்பு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

* சமூக நீதித்துறைக்கு ரூ.6,730 கோடியும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு ரூ.7,000 கோடியும் ஒதுக்கப்படுகிறது. * சமுதாய வானொலி நிலையங்கள் ரூ.100 கோடியில் ஏற்படுத்தப்படும். * ரத்த வங்கிகளுக்கு சேவை வரி விலக்கு அளிககப்படுகிறது. * நடப்பு நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3 சதவீதமாக இருக்கும். * கடந்த 10 ஆண்டுகளில் 14 கோடி மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

* அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்து 3–வது பொருளாதார நாடாக உருவெடுக்கும். நிதிப் ற்றாக்குறை அடுத்த 3 ஆண்டுகள் 3 சதவீதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். * தற்போதைய பொருளாதார சூழ்றிலையை கருத்தில் கொண்டு புதிய வரிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. * இந்த நிதியாண்டில் திட்டச்செலவு ரூ.5,55,322 கோடியாக இருக்கும்.இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்