முக்கிய செய்திகள்:
இடைக்கால முதல்வராக கெஜ்ரிவால்

டெல்லி முதல் – மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜன்லோக்பால் மசோதா நிறைவேறாததால் ராஜினாமா செய்தார். டெல்லி மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எல்லா முடிவுகளையும் உள்துறை மூலமாக ஜனாதிபதியிடம் அனுமதி கேட்டுத் தான் எடுக்க முடியும். இப்போது ராஜினாமா விவகாரத்திலும் இந்த நிலை தான்.

மற்ற மாநில முதல்வர்கள் ராஜினாமா கடிதங்களை கவர்னரிடம் அனுப்பினாலே போதும் அவர் ஏற்றுக் கொண்டதும் பதவி விலகி விடலாம்.தற்போது கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லி கவர்னர் நஜீப் ஜங் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார். கெஜ்ரிவால் நேற்று இரவு கவர்னர் நஜீப் ஜங்கை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

கவர்னர் அந்த கடிதத்தை உள்துறைக்கு அனுப்பி வைப்பார். உள்துறை அமைச்சகம் தான் ஜனாதிபதிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைக்கும். இன்று அவரது கடிதம் உள்துறை அமைச்சகத்திடம் போய்ச் சேர்ந்ததும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.இதற்கான நடைமுறைகள் முடிந்து ஜனாதிபதி அந்த கடிதத்தை ஏற்று அறிவிப்பு வெளியிடுவதற்கு இன்னும் 4 அல்லது 5 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

ஜனாதிபதி அறிவிப்பு வரும் வரை கெஜ்ரிவாலை இடைக்கால முதல்வராக செயல்படுமாறு கவர்னர் நஜீப் ஜங் கேட்டுக் கொண்டார்.

இது பற்றி ஆம் ஆத்மி தலைவர் மணிஷ் சிசோடியா கூறியதாவது:–

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை டெல்லி கவர்னரிடம் நேரில் கொடுத்து விட்டார். ராஜினாமா ஏற்கப்படும் வரை இடைக்கால முதல்– மந்திரியாக செயல் படுமாறு கவர்னர் கேட்டுக் கொண்டார்.

இதற்கான நடைமுறைகள் முடிய 4 அல்லது 5 நாட்கள் ஆகும்.

அனேகமாக அடுத்த வாரம் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் ராஜினாமா ஏற்கப்படும் என்று தெரிகிறது. எங்கள் அரசு அதுவரை தான் நீடிக்கும். நாங்கள் ஆட்சியில் இருந்தது வரை எங்கள் கடமையை சிறப்பாக செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்