முக்கிய செய்திகள்:
தெலுங்கானா குழப்பத்திற்கு காங்கிரஸ்தான் காரணம்: ராஜ்நாத் சிங்

தெலுங்கானா மசோதா இன்று கடும் அமளிக்கிடையே இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது மிகவும் வெட்கக்கேடானது. இதுபோன்ற ஒரு சம்பவம் பாராளுமன்றத்தில் நடக்கும் என நினைத்து கூட பார்க்க முடியாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் இதற்கு காரணம். காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. வாக்கு வங்கி அரசியலை நடத்துகிறது. தெலுங்கானா குறித்து அவர்களுக்கு எந்த எண்ணமும் கிடையாது.

நாங்கள் நேற்று பிரதமரை சந்தித்தபோது, பாராளுமன்ற அவையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கோரிக்கை விடுத்திருந்தோம். மசோதாவை நிறைவேற்றவே நாங்கள் விரும்பினோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று பாராளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு இதை தடுக்க எதுவும் செய்யவில்லை.

சபாநாயகர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும். பாராளுமன்ற அவையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை சபாநாயகரும், மத்திய அரசும் தான் முடிவு செய்ய வேண்டும். பாராளுமன்ற அவை கட்டுக்குள் வரும் வரை இது போன்ற மசோதாக்களை நிறைவேற்ற முடியாது.இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

 

மேலும் செய்திகள்