முக்கிய செய்திகள்:
அதிகாரியின் குற்றச்சாட்டிற்கு ப.சிதம்பரம் மறுப்பு

அவமானப்படுத்தியதாக உயர் அதிகாரி ஒருவர் கூறிய குற்றச்சாட்டை, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மறுத்துள்ளார்.

சமீபத்தில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற வளர்ச்சி திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் விவாதத்தில், மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை செயலாளர் சுதீர் கிருஷ்ணா தனது கருத்தை தெரிவிக்க முயன்றபோது, நிதி மந்திரி ப.சிதம்பரம் குறுக்கிட்டு அவர் பேசும் ஆங்கிலம் புரியவில்லை என்று கூறியுள்ளார். இதனால் கிருஷ்ணா இந்தியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துகளை சிதம்பரத்தின் மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறியுள்ளார்.

கிருஷ்ணா தனது கருத்தை பலமுறை விளக்கி கூறியும் அவரது கருத்து புரியவில்லை என்று சிதம்பரம் திரும்ப திரும்ப கூறியதாகவும், நிதியமைச்சரின் பேச்சு தன்னை அவமதிக்கும் வகையில் உள்ளது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த பிரச்சனையை பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி கமல் நாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

என்ன சர்ச்சை என்றே எனக்கு தெரியவில்லை. அவர் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் கலந்து பேசினார். அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவரை ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டேன். அல்லது அவருக்கு இந்தியில் பேசுவது சுலபமாக இருந்தால் இந்தியில் பேசட்டும். மொழிபெயர்ப்பாளர்கள் அவர் பேசுவதை என்னிடம் விளக்குவார்கள் என்று கூறினேன். நான் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை.இவ்வாறு சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

 

மேலும் செய்திகள்