முக்கிய செய்திகள்:
மக்களவையில் எம்.பி.க்கள் தாக்குதல்: தலைவர்கள் கடும் கண்டனம்

பாராளுமன்றத்தில் இன்றும் தெலுங்கானா மசோதா விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் சீமாந்திரா பகுதி எம்.பி.க்களும், ஆதரவு தெரிவித்து தெலுங்கானா எம்.பி.க்களும் கோஷமிட்டதால் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ஒரு எம்.பி. மற்ற எம்.பி.க்கள் மீது மிளகு பொடி தூவி தாக்குதலில் ஈடுபட்டார். அங்கிருந்த மைக் மற்றும் கம்ப்யூட்டர் உடைக்கப்பட்டது. பேப்பர்களை கிழித்து வீசினர்.

எம்.பி.க்களின் இந்த செயல் குறித்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அமைதியாக சமாளிக்கும் சபாநாயகர் மீரா குமார்கூட இன்று உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து வெறுப்படைந்தார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இது மிகப்பெரிய அவமானம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்” என்றார்.

இது மிகவும் அவமானம். நடந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது. பாராளுமன்ற வரலாற்றில் இதுபோன்று ஏதாவது சம்பவம் நடக்கும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. நடந்த சம்பவம் அனைத்திற்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே பொறுப்பு என்று பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இது பாராளுமன்றத்தை இழிவுபடுத்தும் செயல் என்று பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டார். தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் நடத்திய நாடகம் என்று சுஷ்மா விமர்சனம் செய்துள்ளார்.

எம்.பி.க்களை கொலை செய்ய முயற்சிக்கும் வகையில் நடந்துகொண்ட எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ராஜீவ் சுக்லா வலியுறுத்தினார்.மத்திய மந்திரிகள் கமல்நாத், வீரப்ப மொய்லி, பா.ஜனதா தலைவர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகள்