முக்கிய செய்திகள்:
கெஜ்ரிவால் அரசு கவிழும் ஆபத்து

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்– மந்திரி பதவி வகித்து வருகிறார்.

தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களே கிடைத்தது. மெஜாரிட்டிக்கு 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் தாமாகவே முன்வந்து கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளித்தது. அதை அவர் நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டார்.ஒரு ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஷோயிப் இக்பால், சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்பீர் ஷோகீன் ஆகிய இருவரும் கெஜ்ரிவால் அரசை ஆதரித்து வந்தனர்.

இந்த நிலையில் தொடக்கத்திலேயே கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி மந்திரி பதவி கேட்டு மிரட்டினார். அவரது மிரட்டலுக்கு கெஜ்ரிவால் பணிய மறுத்துவிட்டார். இதனால் தொடர்ந்து அவர் கெஜ்ரிவாலை குறை கூறி வந்தார்.வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார். தவறான பாதையில் செல்கிறார் என்று கூறி வந்தார். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் பின்னி எம்.எல்.ஏ.வை கட்சியை விட்டு நீக்கினார்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியே வந்த பின்னி எம்.எல்.ஏ. அரவிந்த் கெஜ்ரிவால் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கெஜ்ரிவாலை ஆதரிக்கும் ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. இக்பால், சுயேச்சை எம்.எல்.ஏ. ஷோகீன் ஆகியோருக்கு வலை விரித்தார். அவர்களும் வீழ்ந்தனர்.சில நாட்களுக்கு முன் கெஜ்ரிவாலை எதிர்த்து பின்னி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவருடன் இக்பால், ஷோகீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து அவர் டெல்லி கவர்னருக்கு ஆதரவு வாபஸ் கடிதமும் அனுப்பினார்.தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் இக்பால், ஷோகீன் ஆகியோரும் அரசை ஆதரிக்கமாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர். நேற்று ஷோகீன் கவர்னரை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதம் கொடுக்க சென்றார். ஆனால் கவர்னரை சந்திக்க முடியாமல் திரும்பி விட்டார்.

3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வாபஸ் பெற்றதால் கெஜ்ரிவாலின் பலம் 35 ஆக (ஆம் ஆத்மி 27, காங்கிரஸ் 8) குறைந்து மெஜாரிட்டி இழந்துவிட்டது. எனவே எந்த நேரத்திலும் டெல்லி மாநில அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இக்கட்டான நிலையில் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசு கவிழ்ந்து விடும். ஆனால் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரமாட்டோம் என்று தெரிவித்து விட்டனர். அப்படி தீர்மானம் கொண்டு வந்து அரசு கவிழ்ந்தால் அது கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தி விடும் என்று காங்கிரசும், பாரதீய ஜனதாவும் தயங்குகிறது.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறும்போது, ‘‘பின்னி எம்.எல்.ஏ.வை கட்சியை விட்டு நீக்கி விட்டோம். அப்போதே எங்கள் பலம் 27 ஆக குறைந்த விட்ட நிலையில், ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.விடமோ, சுயேச்சை எம்.எல்.ஏ.விடமோ நாங்கள் ஆதரவு கேட்கவில்லை. அவர்கள்தான் தாமாகவே ஆதரவு அளிப்பதாக கூறினார்கள். இப்போது ஆதரவு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் முடிவால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசு கவிழாது.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் எங்கள் அரசின் பலம் 35 ஆக உள்ளது. எனவே அரசு கவிழாது என்று தெரிவித்தனர்.இதற்கிகடையே அடுத்த வாரம் டெல்லி சட்டசபையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்துள்ளார். ஆனால் இங்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு டெல்லி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி கவர்னர் நஜீப்ஜங்கை முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.

லோக்பால் மசோதா நிறைவேற 36 எ ம்.எல்.ஏ.க்கள. ஆதரவு தேவை. கெஜ்ரிவால் பலம் 35 ஆக உள்ளது. எனவே லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் ராஜினாமா செய்வேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன்மூலம் லோக்பால் மசோதாவை நிறைவேற விடாமல் தடுத்து விட்டார்கள். ஊழல் ஒழிப்பில் அவர்களுக்கு அக்கறை இல்லை’’ என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யலாம் என்று கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.

ஒருவேளை அரசு கவிழ்ந்தால் அந்த அனுதாபத்தை பயன்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்தலாம் என்றும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. எனவே அரசுக்கு ஆபத்து பற்றி கவலைப்படவில்லை என்று ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் கூறினார்.இந்த இக்கட்டான நிலையில் பாரதீய ஜனதா லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அரசை காப்பாற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லி மாநில பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஹர்ஷ் வர்தன் தலைமையில் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் சட்ட மந்திரி சோம்நாத்பாரதி மீது 15 புகார்கள் கூறியிருந்தனர். சட்டத்தை மதிக்காமல் செயல்படும் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 

மேலும் செய்திகள்