முக்கிய செய்திகள்:
மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ் தாக்கரே சவால்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டண சோதனைச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடந்த மாதம் குற்றம் சாட்டினார்.இதனையடுத்து, கட்டணத்தை செலுத்த மறுத்து வரும் மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள பல சோதனச் சாவடிகளை அடித்து, நொறுக்கி துவம்சம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக, நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இவ்விவகாரம் பற்றி முதல் மந்திரி பிரித்வி ராஜ் சவானுடன் ராஜ் தாக்கரே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில், சுங்கக் கட்டண வசூலை எதிர்த்தும், அதனை கைவிட கோரியும் வரும் 12-ம் தேதி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்துக்கு ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், புனே நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, ‘நியாயமற்று வசூலிக்கப்படும் சோதனைச் சாவடி கட்டணத்தால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் திட்டமிட்டபடி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடந்தே தீரும்.எனது தொண்டர்களை கைது செய்து வழக்கு போட்ட மாநில அரசுக்கு தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும்’ என்று சவால் விட்டுள்ளார்.

 

மேலும் செய்திகள்