முக்கிய செய்திகள்:
சோனியா-மன்மோகன் சிங்கிற்கு குஜராத் மீனவரின் மகள் கடிதம்

குஜராத்தின் காரல் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஷியால் (35). அவர் பாகிஸ்தானிய அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜனவரி 4ம் தேதி அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். எனவே அவரது உடலை பெறுவதற்கு பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதி கேட்டு ஷியாலின் 12 வயதான மகள் பவிக்கா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதியுள்ளாள்.

இச்சிறுமி இன்று கூறுகையில், "எனது அப்பாவின் இறுதிச் சடங்கிற்காக அவரது உடலை பெற நான் பாகிஸ்தான் செல்ல உள்ளேன். அதனால் எனக்கும் எனது உறவினர்களுக்கும் விசா மற்றும் பாஸ்போர்ட் வழங்கும்படி சோனியா, மன்மோகன் சிங் மற்றும் உயரதிகாரிகளுக்கு இரண்டாவதாக கடிதம் எழுதியுள்ளேன்" என்று கூறினாள்.

ஏற்கனவே பவிக்கா தனது தாயை இழந்து தனது மூன்று வயது சகோதரர் பைனாக்குடன் தனது அத்தையுடன் வசித்து வருகிறார். இச்சம்பவம் பற்றி மேலும் பவிக்கா கூறுகையில், "நான் ஏற்கனவே சோனியா காந்திக்கு ஜனவரி 28ம் தேதி ஒரு கடிதம் எழுதினேன். அவர் ஒரு தாயாக இருப்பதால் எனது உணர்வுகளை புரிந்துகொள்வார்" என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி குஜராத் மீனவ சங்க துணைத்தலைவர் வேல்ஜிபாய் மாசாணி கூறுகையில், "பாகிஸ்தான் அரசு மீதமுள்ள மீனவர்களை இன்னும் விடுதலை செய்யவில்லை. இது பற்றி மத்திய மாநில அரசுகளிடம் மனு அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்