முக்கிய செய்திகள்:
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பாராளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று இரு அவைகளிலும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் கோஷமிட்டதால் அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இப்பிரச்சினை எதிரொலித்ததால், 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது, வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜனதா, அ.தி.மு.க., தி.மு.க மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கடும் எதிர்ப்பிற்கிடையே இந்த மசோதா தொடர்பாக மத்திய மந்திரி கபில் சிபல் விளக்கம் அளித்தார்.இருப்பினும் உறுப்பினர்களின் எதிர்ப்பு வலுத்ததால் விவாதம் நடத்த முடியவில்லை. எனவே, இந்த மசோதா மீதான விவாதத்தை தள்ளி வைப்பதாக அவையை நடத்திய துணைத் தலைவர் அறிவித்தார்.

அதன்பின்னர் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி விளக்கம் அளித்தார். சாதிரீதியான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதியின் யோசனை பற்றி மத்திய அரசின் நிலைப்பாட்டை, மத்திய மந்திரி ராஜீவ் சுக்லா விளக்கினார். அப்போது, சாதிரீதியான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள், மத்திய அரசு தலித்விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. பின்னர் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்தார்.

 

மேலும் செய்திகள்