முக்கிய செய்திகள்:
மாநில அந்தஸ்தை எனக்காக கேட்கவில்லை: புதுவை மக்களுக்காக தான் கேட்கிறோம்:புதுவை முதல் அமைச்சர் ஆவேசம்

மலரட்டும் மாநில அந்தஸ்து’ நூல் வெளியீட்டு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.முதல்–அமைச்சர் ரங்கசாமி, நூலின் முதல் பிரதியை வெளியிட அதனை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பெற்று கொண்டார். தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரசார பாடல்கள் அடங்கிய சி.டி.யையும் முதல்–அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:

புதுவைக்கு மாநில அந்தஸ்து எதற்காக தேவை? என்பது குறித்து இந்த புத்தகத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து இல்லாததால் நான் படும் பாடுகளை அறிந்த பாலன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பெற்றோரும், குழந்தைகளும் தவறாமல் படிக்க வேண்டும்.மாநில அந்தஸ்து இப்போது பேசப்படும் பிரச்சினையல்ல. இது தொடர்பாக புதுவை சட்டசபையில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து முதல்–அமைச்சர்களும் இதுபற்றி பேசியுள்ளனர். அப்படியிருக்க மாநில அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு?

மாநில அந்தஸ்தை எனக்காக கேட்கவில்லை. புதுவை மக்களுக்காக தான் கேட்கிறோம். மாநில அந்தஸ்து பெற மத்திய அரசிடம் வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டத்தை வலியுறுத்தி உள்ளோம். இதில் அனைத்து கட்சியினரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.முதல் அமைச்சர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கு அதிகாரம் வேண்டும். அப்போது தான் மக்களுக்கு தேவையானதை அரசு நிறைவேற்ற முடியும். மக்களுக்கு பதில் சொல்லும் கடமை நமக்கு உள்ளது.

மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக உள்ளது. கொடுப்பதாக இல்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடம் கேட்க வேண்டியது உள்ளது. அதிகாரம் இல்லாமல் பதில் சொல்லும் நிலையில் உள்ளோம்.ரோடியர் மில்லை நவீனப்படுத்தி மீண்டும் திறக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஆனால், அதற்கு தேவையான நிதிக்காக மில்லில் ஒரு பகுதி இடத்தை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை.

ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது நாங்கள்தான். மத்திய அரசையா மக்கள் கேட்பார்கள்? மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசாக இருந்தாலும் நிர்வாகம் முடக்கப்படுகிறது. மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறும் கட்டாயத்தில் உள்ளோம். அனைவரும் ஒன்று சேர்ந்து மாநில அந்தஸ்தை பெற பாடுபட வேண்டும். இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

 

மேலும் செய்திகள்