முக்கிய செய்திகள்:
டெல்லியில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தேசிய கொடி ஏற்றினார்

64–வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்காத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் காலை 10 மணிக்கு நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.முன்னதாக அவர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து குதிரைப்படை வீரர்கள் புடை சூழ ராணுவ வீரர்கள் அணி வகுத்து அழைத்து வந்தனர். முப்படை தளபதிகள் ஜனாதிபதியை வரவேற்றனர்.

ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றி வைத்ததும் வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு அசோக சக்கர விருதுகள் வழங்கினார். இதைத் தெடர்ந்து முப்படைகளின் அணி வகுப்பு நடந்தது.இதில் நமது ராணுவத்தின் வலிமையை உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்திகள், ராணுவ டாங்கிகள், பீரங்கிகள், அக்னி ஏவுகணைகள், போர் விமானங்கள் ஆகியவை இடம் பெற்றன.

தொடர்ந்து ராணுவ வீரர்கள் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, என்.சி.சி. மாணவர்களின் மிடுக்கான அணி வகுப்பு நடந்தது.இந்த குடியரசு தின விழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அவரது மனைவியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த விரர்களின் நினை விடமான அமர்ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

விழாவில் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, சல்மான்குர்ஷித் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலம் சார்பில் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.ராஜபாதையின் இரு புறமும் ஏராளமான மாணவ– மாணவிகள், பார்வையாளர்கள் அமர்ந்து இருந்து முப்படைகளின் அணி வகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

விழாவையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டெல்லியின் நுழைவு வாயில் மற்றும் ஒவ்வொரு சந்திப்பிலும், முக்கிய இடங்களிலும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.குடியரசு தின விழா நடந்த ராஜபாதை மற்றும் அணிவகுப்பு செல்லும் விஜய்சவுக், செங்கோட்டை ஆகிய இடங்களில் மட்டும் 35 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

மேலும் செய்திகள்