முக்கிய செய்திகள்:
பாராளுமன்றம் 5–ந்தேதி கூடுகிறது

தற்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைவதால் அதற்குள் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றம் வருகிற 5–ந்தேதி கூடுகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. 5–ந்தேதி பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.

தொடர்ந்து 21–ந்தேதி வரை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் வருகிற 17–ந்தேதி 2014–2015–ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.அதற்கு முன்னதாக 2014–2015–ம் ஆண்டுக்கான ரெயில்வேயின் இடைக்கால பட்ஜெட்டை ரெயில் மந்திரி மல்லிகார்ஜுனா கார்கே தாக்கல் செய்கிறார்.

பாராளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும். வரிச்சுமைகள் குறைக்கப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது காங்கிரஸ் அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய அரசு பதவி ஏற்கும் வரை அதற்கான வரவு – செலவு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவையும் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணியில் நிதி மந்திரி ப.சிதம்பரம் அதிகாரிகளுடன் சேர்ந்து மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.இதே போல பாராளுமன்ற தேர்தலை குறி வைத்து ரெயில்வே பட்ஜெட்டிலும் பயணிகள் ரெயில் கட்டணம் உயர்த்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் கிடப்பில் கிடக்கும் பல்வேறு சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளன. கடந்த கூட்டத் தொடர்களில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் ஊழல் பிரச்சினைகளை கிளப்பி பாராளுமன்றம் செயல்படாமல் பல நாட்கள் முடங்கியது. எனவே இந்த கூட்டமும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் செய்திகள்