முக்கிய செய்திகள்:
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு ரத்து:ஆயுள் தண்டனையாக குறைப்பு

தமிழக–கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் சந்தன கடத்தல் வீரப்பன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அட்டூழியம் செய்து வந்தான். அவனை பிடிப்பதற்காக இரு மாநில அரசுகளும் கூட்டு அதிரடிப்படையை அமைத்தன. கடந்த 9.4.1993–ம் தேதி தமிழக–கர்நாடக எல்லையில் பாலாறு அருகே உள்ள சுரக்காய்மருவு என்ற இடத்தில் அதிரடிப்படை போலீசாரும், வனத்துறையினரும் போலீஸ் வேனில் வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது வீரப்பனும், கூட்டாளிகளும் அதிரடிப் படை மற்றும் வனத்துறை வாகனங்கள் மீது கண்ணி வெடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் போலீசார் வனத்துறையினர், போலீஸ் உளவாளிகள் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 124 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மைசூர் தடா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

2001–ம் ஆண்டு தடா நீதி மன்றம் 38 பேரை விடுதலை செய்தது. 72 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்ற 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு வீரப்பன் கூட்டாளிகள் என கருதப்பட்ட ஏ.சைமன், எம்.பிலவேந்திரன், ஜே.ஞானப்பிரகாஷ், மீசை மாதையன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையாக அதிகரித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். அது நிராகரிக்கப்பட்டது. கருணை மனு மீதான முடிவை காலதாமதமாக எடுத்ததால் தண்டனையை குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் 'ரிட்' மனுவும் வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மறுசீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் சீராய்வு மனுவை கடந்த 3–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் ரஞ்சன்கோகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்தது. ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு சொன்ன பிறகு மீண்டும் அந்த வழக்கை விசாரிப்பது முறையானது அல்ல. முன் உதாரணமும் அல்ல என்று தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்தார். மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும் எந்த நேரத்திலும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படலாம் என்ற நிலை நிலவியது.

இதற்கிடையே வீரப்பன் கூட்டாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான இறுதி தீர்ப்பு இன்று சுப்ரீம் கோர்ட்டில் கூறப்பட்டது. அப்போது 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கூறினார்கள். இதனால் 4 பேரும் தூக்கு கயிறில் இருந்து தப்பினார்கள்.

மேலும் செய்திகள்