முக்கிய செய்திகள்:
ஊழலை ஓழிக்க பீகார் முதல்வர் தீவிர நடவடிக்கை

பீகார் முதல் – மந்திரி நிதிஷ்குமார் மக்கள் மத்தியில் பெயர் எடுக்க திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக அவர் ஊழல் அதிகாரிகளை களை எடுக்க திட்டமிட்டுள்ளார். பீகாரில் 576 அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இவர்களில் 187 பேர் மீது இலாகா பூர்வ நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

புகாருக்கு ஆளான 576 அதிகாரிகளையும் நீக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மாநில தலைமை செயலாளர் ஏ.கே.சின்கா, மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து இன்னும் ஒரு வாரத்தில் 576 அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும் படிப் படியாக அனைவரும் நீக்கப்படுவார்கள்.

மேலும் அரசு அலுவலகங்களில் அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிக்கவும் நிதிஷ்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தலைமை செயலாளர் மூலம் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவர்களுடன் தலைமை செயலாளர் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். தலைமை செயலாளர் வாரந்தோறும் ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பீகாரில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், தாலுகா அதிகாரிகள் மீதுதான் அதிக அளவில் லஞ்சப் புகார்கள் வருகிறது. இதில் சிலர் சிக்கிக் கொள்கிறார்கள். பலர் தப்பித்து விடுகிறார்கள். அது போன்ற அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.இதே போல் போலீஸ் துறையிலும் லஞ்சத்தை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இனி பீகாரில் அரசு அதிகாரிகள், போலீசார் லஞ்ச ஊழலில் சிக்கினால் அவர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் தலைமைச் செயலாளர் கூறினார்.

மேலும் செய்திகள்