முக்கிய செய்திகள்:
மாநில அந்தஸ்து கண்டிப்பாக தேவை:புதுவை முதல்வர் ரங்கசாமி

முன்னாள் எம்.பி.யும், புதுவை பல்கலைக்கழக இயக்குனருமான ராமதாஸ் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதன் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழா காரைக்காலில் நடந்தது. முதல்–அமைச்சர் ரங்கசாமி புத்தகத்தை வெளியிட்டு முதல்– அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது,

புதுவை மாநிலத்தில் மக்களின் பெருவாரியான ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது. புதுவை மாநிலம் வளர்ச்சி அடையாததற்கு காரணம் மத்திய அரசின் தலையீடுதான். கடந்த 2 ஆண்டுகளாக அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு அரசை செயல்படவிடாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர்.மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்தவொரு திட்டங்களை போட்டாலும் அதற்கு மாநில கவர்னர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். புதுவை மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களை தீட்டினாலும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

காரைக்காலில் தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை போட்டார்கள்.எனவே அரசின் மூலமே காரைக்காலில் மருத்துவ கல்லூரியுடன் கூடிய ஆஸ்பத்திரியை அமைக்க அரசு முடிவு செய்து இதற்கென்று தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து அதற்கான அனுமதியை பெறுவதற்காக கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் முதல்–அமைச்சர், அமைச்சர்கள் என்று யாரையும் அழைக்காமல் அதிகாரிகளை மட்டும் அழைத்து கவர்னர் கூட்டம் நடத்தி உள்ளார்.

மேலும், யார், யாருடைய பெயர்களையோ சேர்க்க வேண்டும் என்று கூறி தனி அதிகாரி நியமனத்திற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார். எத்தனை தடைகள் வந்தாலும் சரி, காரைக்காலில் அரசு சார்பில் கண்டிப்பாக மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்.கவர்னர் தனது உறவினர்களுக்கு எல்லாம் பதவிகளை அளித்து வருகிறார். இது வேறு எங்கும் நடக்காத நிகழ்வாகும். புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது கவர்னர் தன்னிச்சையாக நடந்து கொள்வது கண்டிக்கத் தக்கது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் எதையும் நிறைவேற்ற முடியவில்லை.

நாம் நினைத்ததை செயல்படுத்த வேண்டும் என்றால் நமக்கு மாநில அந்தஸ்து கண்டிப்பாக தேவை. எனவேதான் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று போராடி வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து என்பது குறித்து இந்நூலில் பேராசிரியர் ராமதாஸ் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு முதல்– அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

 

 

மேலும் செய்திகள்