முக்கிய செய்திகள்:
ஜனவரி 23-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறது சிவசேனா

பால் தாக்கரேவின் பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதி சிவ சேனா கட்சி தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது. மத்திய மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர்.சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தி பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரது மகன் உத்தவ் தாக்கரேவுக்கு இந்த தேர்தல் மிகப்பெரிய பரிசோதனையாக இருக்கும்.

மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக உத்தவ் தாக்கரே கூறினார். மக்களவைத் தேர்தலில் சிவ சேனா-பா.ஜனதா கூட்டணியில் இந்த முறை குடியரசு கட்சி (அத்வாலே குரூப்), ராஜு ஷெட்டியின் தலைமையிலான ஸ்வபிமானி ஷேத்கரி சங்காதனா ஆகிய இரண்டு புதிய கட்சிகள் இணைந்துள்ளன.மற்ற பிராந்திய கட்சிகளையும் இணைக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த வாரம் பா.ஜனதா தலைவர் கோபிநாத் முண்டே, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 14-ம் தேதி பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

 

மேலும் செய்திகள்